சாதகப் பட்சிகள் – 5 (2)

“மதுமிதாக்கு அப்போ பதினெட்டு வயசு? இல்ல, பத்தொன்பது? இருபது? அவளும் படிச்சுட்டு தானே இருந்தா?” பதில் எதிர்பார்த்து கேட்டது போலத் தெரியவில்லை கேள்விகள்.

“அவங்க அப்பா கிரிக்கெட்டர் இல்ல?”

“யோவ் மாமா, பேசாம இருக்க மாட்டீங்களா?” எரிந்து விழுந்தான் ராகவன்.

சிரிப்பை அடக்கியபடி அடுத்தக் கேள்வியைக் கேட்டான் உதய், “யார் முதல்ல காதலை சொன்னீங்க?”

“கிரிமினல்ஸை கேள்விக் கேட்டுக் கேட்டு, உங்களுக்குக் கேள்விகள் எவ்வளவு ஈசியா வருது இல்ல மாமா?” என்று ராகவ் எரிச்சலுடன் கேட்க,

“எஸ், பார்ட் ஆப் மை லைஃப். ஒன்னும் பண்ண முடியாது” என்றான் உதய் தோள் குலுக்கி, ராகவனுக்குச் சிரிப்பாக வந்தது.

“என்ன மாமா வேணும் உங்களுக்கு?” புன்னகையுடன் ராகவன் கேட்க, உதய் சட்டென்று ஒன்றும் சொல்லவில்லை.

“ஆராதனா உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணு தானே மாமா?” என்று ராகவன் கேட்க,

“ஆங்…இல்லையே” முதல் முறையாகப் பதில் கொடுக்கத் தடுமாறினான் உதய்.

“அவங்க குடும்பம்?” என்று ராகவன் கேட்க,

“ம்ம் தெரியும். ஆனா..”

“அப்போ ஆராதனா கூட என் கல்யாணம் கண்டிப்பா நடக்கணும். இல்ல மாமா?” முதல் முறையாக உதயை தன் கேள்வியால் மடக்கி இருந்தான் ராகவன்.

“ஆங், ஆமா டா. கண்டிப்பா நடக்கணும்.” என்று உதய் அழுத்தமாகச் சொல்ல,

“ம்ம். நடக்கும் மாமா. இப்போ, வாங்க. இந்த ரூமில் இருக்க ஃபோட்டோ எல்லாத்தையும் எடுப்போம். நாளைக்கு ஆராதனா வந்து பார்த்தா ஷாக்காகிடுவா. பாவம், அவளை எதுக்குத் தேவையில்லாம கஷ்டப்படுத்திக்கிட்டு.. இல்ல மாமா? வாங்க. அதுக்குள்ள இந்தப் பழசை எல்லாம் எடுத்து ஓரமா போடுவோம்” என்று சாதாரணமாக ராகவன் சொல்ல,

“மனசுல இருக்கப் பழசையும் ஓரமா தான் போட போறியா ராகவ்? முழுசா தூக்கிப் போடுற எண்ணம் இல்லையா?” கேட்டான் உதய்.

“கண்ணுக்கு தெரியாத தூரத்துக்குத் தூக்கி போட்டு முழுசா ரெண்டு வருசம் ஆச்சு மாமா” என்றவன், நிதானமாகக் கையில் இருந்த புகைப்படத்தைப் பார்த்தான்.

“ம்ம், எனக்கே காதுல பூ சுத்துறான்” முணுமுணுத்தான் உதய்.

புகைப்படத்தை அப்படியே தூக்கி படுக்கையறையின் பரணில் வீசி எறிந்தான் ராகவன்.

அதைப் பார்த்து ஒரு நொடி அதிர்ந்தாலும் கூட, வெளியில் காட்டிக் கொள்ளவில்லை உதய்.

“அவ்வளவுதான் டா. தூக்கிப் போட்டாச்சு இல்ல? வா, போகலாம்” என்று இயல்பாக ராகவின் தோளில் கைப் போட்டுக் கொண்டு வெளியில் போனான் உதய்.

அடுத்து வந்த ஒரு மணி நேரமும் உதய்தான் பேசிக் கொண்டிருந்தான். ராகவ் அமைதியாக அவனின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான்.

நேரம் இரவு எட்டை நெருங்குகையில் அவனது ஆயா விசாலாட்சி அவர்களின் ஜவுளி கடையில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்திருக்க, உதய் மனைவியை அழைக்கக் கடைக்குக் கிளம்பினான்.

“யோவ் மாமா, புரொமோஷன் கொடுத்தா அதுக்கு ஏத்த மாதிரி வேலை பார்க்கணும். இன்னமும் எனக்கு ஆறுதல் சொல்லிட்டு, என் பின்னாடியே அலைஞ்சுட்டு இருந்தா எப்படி?” என்று நக்கல் சிரிப்புடன் ராகவன் கேட்க, தனது டிரேட் மார்க் வசீகரப் புன்னகையுடன் பதில் ஏதுவும் சொல்லாமல் விடைப் பெற்றுக் கொண்டான் உதய்.

ராகவி இன்னமும் ராகவனின் வாழ்வு குறித்த கவலையில் மூழ்கி இருக்கும் போது உதய் எப்படி அதைக் கையைக் கட்டிக் கொண்டு பார்த்திருப்பான்?

“கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்கணும்” மனதில் சொல்லிக் கொண்டே தன் வண்டியில் ஏறி அமர்ந்தான் உதய்.

இரவு உணவை முடித்துக் கொண்டு படுக்கையில் சரிந்த ராகவனுக்கு உறக்கத்திற்குப் பதிலாக உதயின் கேள்விகள் காதில் எதிரொலித்து அவனின் உறக்கத்தைத் தொலைக்கச் செய்தது.

அப்போது மருத்துவம் மூன்றாம் ஆண்டுப் படித்துக் கொண்டிருந்தான் அவன்.

மதுமிதா இதே வீட்டின் மொட்டை மாடியில் அவனுக்கு எதிரில் நின்று கொண்டு, சுற்றிலும் பூக்கள் சூழ, மஞ்சள் நிற சுடிதாரில் தானும் ஒரு பெரிய சூரியகாந்தி பூவைப் போல இருந்தவள், “ஃபேஷன் டிசைனிங் படிக்கப் போறேன் ராகவ்” என்று அவனிடம் சொல்ல,

“ஓ சூப்பர். எந்தக் காலேஜ்? எப்போ ஸ்டார்ட் ஆகுது?” கேட்டான் ராகவன்.

அவனுக்கு அவளை மிகவும் பிடிக்கும்.

பிடிக்கும். அவ்வளவுதான். அந்த வயதில் மதுமிதா அவனுக்குக் கொடுத்த முக்கியத்துவம் அவனுக்குப் பிடித்திருந்தது.

படிப்புக் குறித்துதான் அவனிடம் அதிகம் பேசுவாள். அவன் இயல்பிலேயே நன்றாகப் படிக்கக் கூடியவன் என்பதால் அவளது சந்தேகங்களைத் தீர்த்து வைப்பது அவனுக்குக் கடினமாக இல்லை. அவர்களைச் சுற்றி எப்போதும் ராகவி, சுஹாசினி, பனிமலர் இருந்து கொண்டே இருப்பார்கள். அதனால் தேவையில்லாத எதையும் அவர்கள் பேசிக் கொண்டதே இல்லை.

அன்றுதான் முதல் முறையாக முழுமையாக அவனைக் காதல் பார்வைப் பார்த்தாள் அவள்.

“நீங்க ஜவுளி கடை வச்சிருக்கீங்கன்னு நான் ஃபேஷன் டிசைனிங் படிக்கல ராகவ். எனக்குப் பிடிச்சுதான் இந்தப் படிப்பு எடுக்கறேன்” என்று அவள் சொல்ல, ஆச்சரியத்துடன் கண்களை விரித்து அவளைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தான் ராகவன்.

அவளிடம் இருந்து அப்படி ஒரு வெளிப்படையான பதிலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

“இல்ல, இல்ல. நான் அப்படி நினைக்கல. ஆனா, நீ வீட்ல கேட்டு படி” என்று அவன் சொல்ல, “சரி” என்றாள் மதுமிதா.

திடீரென்று,

“ஜவுளி கடைக்கு டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் இல்ல எடுத்து இருக்கணும். அது இன்னும் பெட்டர் இல்லையா?” என்று அவன் கேட்க, குழம்பிப் போய் அவனைப் பார்த்தாள் மதுமிதா.

விரிந்த புன்னகையுடன், “எங்க ஜவுளி கடையை மனசுல வச்சு நீ ஃபேஷன் டிசைனிங் எடுக்கலன்னு எனக்குத் தெரியும். நல்லா படி” என்றான் அவன். மதுமிதாவின் முகம் அப்போதுதான் தெளிந்தது.

மேலே என்ன பேசுவது என்று தெரியாமல் அவர்கள் தடுமாறிக் கொண்டிருக்க, பின்னால் இருந்த சுஹாசினி வேண்டுமென்று அலைபேசியில் சத்தமாகப் பாட்டை ஒலிக்க விட்டாள்.

“காதல்… கடிதம்…. வரைந்தேன் உனக்கு, வந்ததா, வந்ததா?” என்ற பாடல் வரிகளில் அதிர்ந்து மதுமிதாவின் முகத்தைப் பார்த்தான் ராகவன்.

அவள் தப்பாக நினைத்துக் கொள்ளப் போகிறாள் என்று பாடலை நிறுத்த சொல்ல திரும்பி பார்த்தான், அங்கே யாரும் இல்லாதிருக்க, படபடப்புடன் திரும்பி, “மதுமிதா..” என்று மெல்ல அழைத்தான் ராகவன். அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க, சரியாக அந்நேரம்,

“காதல்.. கடிதம்… வரைந்தாய் எனக்கு, வந்ததே வந்ததே..” என்றது பெண் குரல்.

இருவருக்கும் சிரிப்புதான் வந்தது.

error: Content is protected !!
Scroll to Top