சாதகப் பட்சிகள் – 5 (1)

“உன்னை விட என்னை யாரும், அதிகமாக நேசித்திருக்க முடியாது ராகவ்” அங்கே ராகவனின் மனம் கேட்டக் கேள்விக்கு, இங்கே அலைபேசியில் இருந்த அவனின் புகைப்படம் பார்த்துப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் மதுமிதா.

அவனுடன் இணைந்து நின்றிருந்த ஆராதனாவை பார்க்கையில் மனதில் சுருக்கென்று வலி பரவ அலைபேசியை அணைத்து ஓரமாக வைத்து விட்டு, கண்களை மூடி உறங்க முயன்றாள் அவள்.

அவளின் மூடிய விழிகளுக்குள் உறக்கத்திற்குப் பதிலாக, ராகவனை முதன்முதலாகப் பார்த்த நாள் வந்து நின்றது.

மதுமிதாவின் குடும்பம், ராகவன் குடும்பத்தினர் வசித்த அதே பகுதியில்தான் இருந்தனர்.

இரு குடும்பங்களின் பூர்வீகமும் காரைக்குடி என்பதை யதேச்சையாக ஒரு நாள் அறிந்த பின் அவ்வப்போது விஷேச வீடு, நல்லது, கெட்டதில் சந்திக்கும் போது பார்த்துப் பேசிக் கொள்வார்களே தவிரப் பெரிதாக நெருக்கமான பழக்கம் எல்லாம் கிடையாது.

அப்படி இருக்கையில் ஒரு நாள் மதுமிதாவின் புது வீட்டிற்குக் கிரகப் பிரவேசம் என்று பத்திரிக்கை எடுத்துக் கொண்டு ராகவின் வீட்டிற்கு வந்தார் மதுமிதாவின் பாட்டி. அவருக்குத் துணையாக மதுமிதா மற்றும் அவளின் தங்கை வெண்பா உடன் வந்திருந்தனர்.

ராகவன் வீட்டுப் பெரியவர்களிடம் மதுமிதாவின் பாட்டி பேசிக் கொண்டிருக்க, கண்களைச் சுழற்றி வீட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மதுமிதா மாடிப்படியில் இறங்கி வந்த ராகவனை விழி விரித்துப் பார்த்தாள்.

அவனுக்கு அருகில் வந்து கொண்டிருந்த ராகவியையும் அவனையும் அதிசயம் போல மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள் பதிமூன்று வயது மதுமிதா.

அவளுக்கு நினைவு தெரிந்து அவனிடம் பேசிய முதல் வாக்கியமும், “நீங்க ரெண்டு பேரும் ஒன்னு போல இருக்கீங்க” என்று அவள் ராகவியைக் காட்டிச் சொல்லியதாகவே இருந்தது.

பதினைந்து வயது ராகவன் சிரித்துக் கொண்டே, “நாங்க டுவின்ஸ்” என்றான் அவளிடம். அவனுக்கு இந்த ஆச்சர்ய பார்வையும், கேள்வியும் பழகியே இருந்தது. அவர்கள் ஒன்றும், “ஐடன்ட்டிக்கல் டுவின்ஸ்” (Identical twins) அல்ல. ஆனாலும், அதிகமான உருவ ஒற்றுமை இருவரிடமும் இருக்கும்.

ராகவனின் அம்மா தவறிய போதுதான் திரும்பவும் அவன் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்பு அவளுக்குக் கிடைத்தது.

அதன் பின் அவன் வீட்டிற்கு அடிக்கடி சென்றாள். படிப்பில் ஏதேனும் சந்தேகங்கள், கேள்விகள் என்று இரு நாளைக்கு ஒரு முறை ஏதாவது காரணத்தை ஏற்படுத்திக் கொண்டு அவனது வீடு தேடிச் சென்றாள் அவள்.

ராகவியைப் பார்க்க போவதாக வீட்டில் சொல்லி விட்டு, ராகவனைப் பார்க்க வந்தாள் அவள்.

ராகவன், ராகவி இருவரிடம் இருந்த அன்பும், பிணைப்பும் அவளை ஆச்சரியப்படுத்தியது. ஏக்கமுற செய்தது.

சிறு புருவ சுளிப்புடன் கண்ணைச் சுருக்கி ஒரு சிறு பார்வை. அவ்வளவுதான். அதற்கு மேல் அவளைக் கண்டுக்கொள்ள மாட்டாள் ராகவி. ஆனால், அவளின் நெருங்கிய தோழி சுஹாசினிதான் எப்போதும் மதுமிதாவை கண்காணித்துக் கொண்டே இருப்பாள். ராகவனை நெருங்க விடாமல் விரட்டியடிப்பாள்.

அவள் ராகவனிடம் பள்ளி பாடத்தில் சதேகங்கள் கேட்கும் போதெல்லாம்,

“இங்க வா மதுமிதா, நான் சொல்லித் தரேன்” என்று அவளின் சந்தேகத்தைத் தீர்த்து, அவளை ராகவனை நோக்கி திரும்பியும் பார்க்க அனுமதிக்காமல் வீட்டிற்குத் துரத்தி விடுவாள் சுஹாசினி.

அவளுக்கு நினைவு தெரிந்து அடுத்து வந்த சில வருடங்கள் அப்படித்தான் தொடர்ந்தது.

அந்த வயதிற்கே உரிய ஆர்வம் அவளை, அவனை நோக்கி ஈர்த்தது. ஆனால், ராகவன் சாதாரணப் பார்வை, புன்னகையைத் தவிரப் பெரிதாக எதுவும் அவளிடம் பேசியது கூடக் கிடையாது.

அவள் பனிரெண்டாம் வகுப்பு முடித்துக் கல்லூரிக்குள் அடி எடுத்து வைத்ததும்தான் அவனை நெருங்கவே அனுமதித்தார்கள் அவன் வாழ்க்கையில் அப்போதிருந்த பெண்கள்.

வேறு யாரும் அல்ல. ராகவி, சுஹாசினி, பனிமலர் மூவரும்தான்.

“இறுதியில் மொத்தமாக அவளுக்கே உரிமையானவனான் ராகவன். ஆனால்…”

நினைவுகளோடு உறக்கமும் மெல்ல அவளைத் தழுவ சிரித்துக் கொண்டே அதில் அமிழ்ந்து போனாள் மதுமிதா.

ராகவன் வயநாட்டில் இருந்து திரும்பி இரு நாட்கள் கடந்திருந்தது.

அன்று வேலையை முடித்து வெளியில் வரும் போதே உதய் அவனைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல, இருவரும் ஒன்றாக அவன் வீட்டிற்கு வந்திருந்தனர்.

“என்ன மாமா? உங்க பொண்டாட்டி புள்ளைங்கள விட்டுட்டு என்ன பார்க்க வந்திருக்கீங்க? என்ன விஷயம்?” என்று கேட்டுக் கொண்டே மாடியில் இருந்த அவனது அறையை நோக்கி நடந்தான் ராகவன்.

அவனைப் பின் தொடர்ந்த படி, “நீ தானே டா, ஏதோ பேசணும்னு நேத்து சொன்ன? அதான் இன்னைக்கு டைம் ஒதுக்கி உன்ன பார்க்க வந்தேன். நீயென்னனா என்னைக் கேள்வி கேட்கற. என்னடா பண்ணித் தொலைச்ச?” என்று திருப்பி அவனைக் கேள்விக் கேட்டான் உதய்.

அறையின் கதவைத் திறந்து, “இல்ல மாமா..” என்று தொடங்கிய ராகவன் மேலே பேச முடியாமல் வார்த்தைகள் மறந்தவனாக அப்படியே கதவைப் பிடித்தபடி நின்றான்.

அறை முழுவதும் நிறைந்திருந்த மதுமிதாவின் வாசனை திரவியத்தின் நறுமணம் அவனது அனைத்து செல்களிலும் பரவி அவனை ஆழ்ந்த மூச்செடுக்க வைத்தது.

சட்டென்று திரும்பி உதயை முறைத்தான் அவன்.

“என்ன?” என்று கேள்வியாகப் புருவம் உயர்த்தினான் உதய்.

“அவ.. மதுமிதா, இந்த ரூமிலா இருந்தா?” ராகவ் கேட்க,

“ஆமா டா” என்றான் உதய்.

“என்னோட இந்த ரூமை எதுக்கு அவளுக்குக் கொடுத்தீங்க மாமா? வீட்ல வேற ரூமா இல்ல? மப்ச், என்ன பிளான் பண்றீங்க புருஷனும், பொண்டாட்டியும்?” என்று அவன் நெற்றி சுருக்கி கோபமாகக் கேட்க,

“அடேய், அவ வீட்டுக்குள்ள வந்ததும், நேரா உங்க ரூமை தேடிதான் வந்தா. நாங்க யாரும் எதுவும் சொல்லல பா ராசா..” என்று அந்த, “உங்க ரூமில்” சிறிய அழுத்தம் கொடுத்து உதய் சொல்ல, ராகவன் அவனைச் சந்தேகமாகவே பார்த்தான்.

“என்னடா பார்வை? உன் ரூம் கீழ இருக்கு. நீ இந்த ரூமை யூஸ் பண்றதில்லைன்னு சொல்றதுக்கு எல்லாம் எங்களுக்கு உன் மதுமிதா வாய்ப்பு கொடுக்கல.” என்று உதய் தோள் குலுக்கியபடி சொல்ல,

“நம்பிட்டேன் மாமா” என்றான் ராகவன்.

அவன் முகம் கவலையைக் காண்பித்தது.

சுவரை நிறைத்திருந்த புகைப்படத்தை உணர்ச்சிகள் அற்றுப் பார்த்தான் அவன்.

இதைப் பார்த்து மதுமிதா என்ன நினைத்தாளோ என்ற சிந்தனை மனதில் ஓட, கை உயர்த்திப் புகைப்படத்தை அங்கிருந்து நீக்கப் போனான். அவன் உயரத்திற்குக் கையில் சிக்கவில்லை அது.

வெகு இயல்பாகக் கை உயர்த்தி அதை அங்கிருந்து அகற்றி அவன் கைகளில் தந்தான் உதய்.

“மதுமிதாகிட்ட ஃபர்ஸ்ட் டைம் என்ன பேசினன்னு ஞாபகம் இருக்கா ராகவ்?” மென்மையாகக் கேட்டான் உதய்.

உதடு சுழித்துச் சிரித்தான் ராகவன்.

“மதுமிதா ஏன் உனக்கு ஸ்பெஷல்? அவளை ஏன் பிடிச்சது?” உதய் கேட்க,

“யோவ் மாமா, நீங்க எவ்வளவு டிரை பண்ணாலும் எங்களுக்கு நடுவுல எதுவும் வொர்க் அவுட் ஆகாது. வீணா உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க” சிரித்துக் கொண்டே சொன்னான் ராகவன்.

முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் சிலையாக நின்றான் உதய்.

“நீ எம்பிபிஎஸ் படிச்சுட்டு இருக்கும் போதே உங்களுக்கு நிச்சயம் ஆகிடுச்சு இல்ல?” மீண்டும் கேள்வி கேட்டான் உதய்.

ராகவனிடத்தில் இருந்து மௌனம் மட்டுமே பதிலாக வந்தது.

error: Content is protected !!
Scroll to Top