அடுத்தப் பத்தாம் நிமிடம் அறையை விட்டு வெளியில் வந்தாள்.
அந்த மாடியில் இருந்த ஹாலின் ஒரு பக்க சுவர் முழுவதும் புகைப்படங்கள் நிறைந்திருந்து, அவளது பார்வையைக் கவர்ந்தது.
அங்கும் ராகவியின் குழந்தைகளோடு அவள் புகைப்படமும் இருக்க, சட்டென்று தொண்டை வறண்டு போனது அவளுக்கு.
“நான் சென்னை வந்திருக்கவே கூடாது” நூறாவது முறையாகத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் மதுமிதா.
அந்த வீடும், அதின் மூலை முடுக்கெல்லாம் வியாபித்திருந்த நினைவுகளும் இந்தப் பிறவியில் மறக்கவே முடியாது என்று நிச்சயமாக நம்பினாள் அவள்.
அவளுக்கு நிற்க முடியாமல் கால்கள் வலுவிழந்து, தோய்ந்து போவது போலிருந்தது.
உணவு என்ற ஒன்றை சாப்பிட்டு முழுதாக ஒரு நாளாகி விட்டது என்பதே அவளுக்கு உரைக்கவில்லை. காதை அடைக்கும் உணர்வை கொஞ்சம் கூடப் பொருட்படுத்தவில்லை அவள்.
உண்ணும் நிலையிலா அவளிருந்தாள்? உணவு மட்டுமல்ல.
எதையுமே செய்யும் மனநிலையில் அவள் இல்லை.
நகர மறுத்த கால்களை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து, ஏற்கனவே வந்து அவளுக்காகக் காத்திருந்த ஆட்டோவில் ஏறினாள் மதுமிதா.
பத்தே நிமிடத்தில் அவளது வீட்டை அடைந்திருந்தாள்.
அமைதியும், வெறுமையும், தனிமையும் சிவப்புக் கம்பளம் விரித்து அவளை உள்ளே வரவேற்றது.
ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள். அலைபேசியில் ராகவனின் நிச்சய புகைப்படத்தை எடுத்தாள். அதைப் பார்க்கும் போதே,
சில வருடங்களுக்கு முன்,
“அவருக்கு நிச்சயமாகிடுச்சுங்க” என்று சொன்ன செவிலியை ஏளன புன்னகையுடன் ஏறிட்டது அவளுக்கு இன்றும் பசுமையாய் நினைவிருக்கிறது.
“என் கூடத் தான்” என்று கர்வமாய்ப் பார்த்ததும் கூட, நன்றாக நினைவில் இருக்கிறது.
அவள் கேட்டதற்காக, அவளின் காதலுக்காக, அவளின் அன்பை மதித்து, தனது வாழ்க்கையையே அவள் கையில் தூக்கிக் கொடுத்தான் அவன்.
பதிலுக்கு என்ன செய்தாள் அவள்? திருமணப் பந்தத்தை, வாழ்க்கையை, அவனது அன்பை அத்தனை அசட்டையாக உடைத்து நொறுக்கினாள்.
காதல் கண்ணாடி பாத்திரம் போலச் சில்லு சில்லாகக் காலுக்கடியில் நொறுங்கி விழுந்தது.
அத்தனையிலும் அடர்த்தியாகக் காதலை அள்ளித் தெளித்தாள்.
“லவ் இஸ் எப் பர்டன்” (Love is a burden.)
ஒரு கட்டத்திற்கு மேல் சுமை தாங்க முடியாமல், மூச்சு காற்றுக்குத் தவித்தப்படி புலம்பினான் ராகவன்.
அவ்வளவுதான். அவனைத் தொலைத்து விட்டாள் அவள். நிரந்தரமாக.
அமர்ந்திருந்த சோஃபாவில் சரிந்து படுத்துக் கொண்டாள் மதுமிதா. நினைவுகள் தாமாகப் பின்னோக்கி செல்லத் தொடங்கியது.
அன்று அதிகாலை வயநாட்டில் இருந்து கிளம்பி, இரவு சென்னையை அடைந்திருந்தனர் ராகவன் குடும்பத்தினர்.
அவர்கள் வீட்டை அடைந்த சிறிது நேரத்தில் எல்லாம் அவனுக்கு ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து அவசரமாக அழைப்பு வர, அவதி அவதியாகக் குளித்து, உடை மாற்றிக் கொண்டு அங்கு விரைந்தான் ராகவன்.
அது ஒரு மகப்பேறு மருத்துவமனை. சிசேரியன் கேஸ் என்று அவனை அழைத்திருந்தார்கள்.
மருத்துவமனைக்குள் நுழைந்தது தான் அவனுக்குத் தெரியும். அவன் உடல் மின்னல் வேகத்தில் இயங்க, ஐந்தாம் நிமிடம் அறுவை அரங்கில் இருந்தான் அவன்.
அவனைக் கண்டதும் ஆசுவாச பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார் அங்கிருந்த மகப்பேறு மருத்துவர்.
ரீஜினல் அனஷ்தீசியா எனப்படும் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மரத்துப் போகச் செய்யும் வழிமுறையைச் செயல்படுத்தத் தயாரானான் ராகவன்.
முதலில் இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் உடலின் ஆக்சிஜன் அளவை சரி பார்த்துக் கொண்டான்.
அந்தக் கர்ப்பிணி பெண்ணை ஒருக்களித்துப் படுக்க வைத்து, கால்களை நன்றாக மடக்கி தலையைத் தொடச் செய்தான். அந்தப் பெரிய வயிற்றுடன் சிரமமான அந்தப் பொசிஷனில் அப்பெண் படுத்திருக்க, முதுகை ஆன்டி செப்டிக் கொண்டு சுத்தப்படுத்தினான். ஊசி செலுத்த வேண்டிய இடத்தைக் குறித்துக் கொண்டான்.
முதுகுத் தண்டில் (ஸ்பைனல்) நுண்ணிய ஊசியின் மூலம் மயக்க மருந்தை செலுத்த, அப்பெண்ணின் இடுப்புக்கு கீழான பகுதி முழுவதுமாகச் செயல் இழக்கத் தொடங்கியது.
மகப்பேறு மருத்துவர் நொடியும் தாமதிக்காமல், சிகிச்சையைத் தொடங்கி இருந்தார்.
ராகவனின் மனம் சில ஆண்டுகளுக்கு முன்பு இதே மருத்துவமனையில் நடந்த நிகழ்வொன்றை அசைப் போட தொடங்கியது.
அவன் அப்போது முதலாம் ஆண்டு எம்.டி அனஸ்தீசியாலஜி படித்துக் கொண்டிருந்தான். படித்துத் கொண்டிருக்கும் போதே, மூத்த மயக்கவியல் மருத்துவர்களுக்கு இவர்கள் உதவலாம் என்பதால் அந்தத் தனியார் மருத்துவமனையில் இதே போலச் சிசேரியன் டெலிவரிக்காக வந்திருந்தான் அவன்.
அப்போது அவனுக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. ஆனால், நிச்சயிக்கப்பட்டிருந்தது.
அன்றைக்கு இரண்டு சிசேரியன் பிரசவங்கள் முன் கூட்டியே நல்ல நேரம் பார்த்து, அறுவை சிகிச்சை செய்யப்படக் காத்திருந்தனர்.
முதல் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் நல்லபடியாக ஆண் குழந்தை பிறந்தது. அப்பெண் அறைக்கு மாற்றப்படும் வரை அங்கிருந்தவன், அதன் பின் வெளியில் வந்தான்.
அலைபேசி ஒலியெழுப்பித் தொல்லை செய்ய, அதை எடுத்து காதிற்குக் கொடுத்தான் ராகவன்.
“கொஞ்சம் டெலிவரி வார்டுக்கு வாங்க டாக்டர்” என்ற வேண்டுகோளுக்கு இணங்கி நடக்கத் தொடங்கினான்.
“நல்லா புஷ் பண்ணு. ம்ம் நல்லா. நார்மல் டெலிவரி தான் பெஸ்ட். சிசேரியன் வேண்டாம் வெண்பா. பிளீஸ் புஷ்” என்று கத்திக் கொண்டிருந்தாள் அவள்.
அந்நேரம் பார்த்து உள்ளே நுழைந்தான் ராகவன்.
“கொரங்கே வெளில போய்த் தொலை. எனக்குக் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் வா. அக்கா மாதிரியா பேசுற? மாமியார் மாதிரி கொடுமை பண்ற” என்று மூச்சு வாங்க கத்திக் கொண்டிருந்தாள் வெண்பா.
அறைக்குள் நுழைந்த ராகவனை விழி விரித்துப் பார்த்தவள், “ஹாய் டாக்டர்” என்றாள்.
குனிந்து சத்தமாக வெண்பாவின் காதில், “இவர் தான் பிரசவம் பார்க்கப் போறாரா வெண்பா? வாவ். எனக்குலாம் இந்த முகம் பார்த்தாலே வலி எடுக்காது.” சொன்னாள் அவள்.
அவள் பேசாதது போலப் பாவித்து, வெண்பாவிடம் திரும்பினான் அவன்.
“வலி எப்படி இருக்கு? தொடர்ந்து இருக்கா? டாக்டர் என்ன சொல்றாங்க?” என்று வெண்பாவை பார்த்து அவன் கேட்க,
“ஆபரேஷன் தான் பண்ணனும்னு சொல்றாங்க. பயமா இருக்கு. நீங்க இருப்பீங்க தானே? எனக்கு மயக்கம் நீங்க தானே கொடுப்பீங்க?” வெண்பா பயத்துடன் கேட்க, அவளுக்குப் பக்கத்தில் இருந்தவள், தங்கையை இரக்கமின்றி முறைத்துக் கொண்டிருந்தாள்.
“இல்ல. நான் இருக்க மாட்டேன். என்னோட சீப் டாக்டருக்கு, வேற ஒரு ஆபரேஷன் இருக்கு. நான் அவருக்கு அசிஸ்ட் பண்ணதான் வந்திருக்கேன். நீங்க பயப்படாம இருங்க. டெலிவரி நல்லபடியா நடக்கும். குழந்தை நல்லபடியா பிறக்கும்.” என்று அவன் ஆறுதலான புன்னகையுடன் சொல்ல, வெண்பாவின் முகத்தில் இருந்த பயம் அதிகரித்திருந்தது.
அவனுக்கு அடுத்த அறுவை சிகிச்சைக்கு நேரமாக லேசான தலையசைப்புடன் அங்கிருந்து நகர்ந்தான் ராகவன்.
பின்னாலேயே அவனைத் துரத்தியது அவள் குரல்.
“சீக்கிரம் அந்தக் கையால மயக்க மருந்து வாங்கிடனும்னு பார்க்கறேன். எங்க? முடியலையே?” புலம்பினாள் அவள். மெலிதான புன்னகை அவன் முகத்தில் வந்தமர்ந்தது.
“அவருக்கு நிச்சயமாகிடுச்சுங்க” அப்போது அறைக்குள் நுழைந்த செவிலி கடுமையாகச் சொல்ல,
“இருக்கட்டும். அதுக்கு?” என்று அலட்சியமாக, ஏளன புன்னகையுடன் கேட்டாள் அவள்.
“சீக்கிரம் அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதாதான் பேச்சு அடிபடுது” மேலும் அவர் தகவல் சொல்ல,
“ஓகே. நல்லா பண்ணிக்கட்டும். யார் வேணாம்னு சொன்னா? ஆள் நல்லா இருக்கார்னு பார்த்தேன். அது தப்பா என்ன?” என்று தர்க்கம் செய்தாள் அவள்.
‘இப்ப இருக்கப் புள்ளைங்க. எப்பா, பேச்சா பேசுதுங்க’ வாய்க்குள்ளே முணுமுணுத்தபடி தன் வேலையைப் பார்த்தார் அவர்.
ஐந்து மணி நேரம் கழித்து அவன் சோர்வுடன் மருத்துவமனையின் உணவகத்தைத் தேடிச் செல்ல, எங்கிருந்தோ ஓடி வந்து அவனுடன் இணைந்துக் கொண்டாள் அவள்.
“வெண்பா…” என்று அவன் தொடங்க,
“நல்லாருக்கா. இப்பதான் ரூமுக்கு மாத்தினாங்க. பெண் குழந்தை.” படபடவென்று பதில் சொன்னாள் அவள்.
இருவருக்கும் காஃபி வர, கால்களை நன்றாக நீட்டி அமர்ந்து கொண்டு அவளைப் பார்த்தான் ராகவன்.
சரியாக அந்நேரம் அந்தச் செவிலி அங்கே வர, நெருக்கமாக அமர்ந்திருந்த இருவரையும் வாய் பிளந்து பார்த்தார் அவர்.
அதிலும் அவரின் பார்வை அவளைக் கூறு போட, “ஜெனி சிஸ்டர்” என்று அவரைக் கையசைத்து அழைத்தான் ராகவன்.
பக்கத்தில் வந்தவரிடம், “இது மதுமிதா. நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு” என்று அறிமுகப்படுத்த, அசடு வழிந்தார் அவர்.
“கங்கிராஜுலேசன் டாக்டர்.” என்றவர், மதுமிதாவின் முகம் பார்த்து சிரித்து, “எனக்குத் தெரியாது மா. அதான்…” என்று இழுக்க,
“பரவாயில்ல சிஸ்டர். நான் சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு விளையாடிட்டேன். சாரி” என்றாள் சிரித்துக் கொண்டே,
அவரும் முகம் மலர சிரித்து, “எப்போ கல்யாணம் டாக்டர்?” என்று விசாரித்தார்.
“சீக்கிரமே” என்றான் ராகவன்.
இன்றைக்கும் இருவரின் மனதும் அதைத்தான் அசை போட்டுக் கொண்டிருந்தது.
அவளுக்கு எல்லாமே விளையாட்டுதான். வாழ்க்கையையும் விளையாடிதான் பார்த்து விட்டாள்.
அந்த விளையாட்டில் கூடத் தோல்வியையே தழுவியதுதான் சோகம் எனக் கசப்பாக நினைத்துக் கொண்டாள் மதுமிதா.
ராகவன் இன்றும் அந்த மருத்துவமனையின் உணவகத்தில்
தான் அமர்ந்திருந்தான். அதே மேஜை. அவளில்லாத குறையை அவளின் நினைவுகளைக் கொண்டு நிரப்ப முயன்றான்.
முதல் முறையாக அவளைச் சந்தித்த நொடியில் போய் நின்றது அவன் மனம்.
பதின்ம வயதில் வந்த ஈர்ப்பு, அவர்கள் இருவரும் இயல்பாக எடுத்துக் கொண்டு, மறந்திருக்கக் கூடும்.
ஆனால், உடன் இருந்தவர்கள் அவர்களுக்கு நடுவில் இருந்த ஈர்ப்பை அதன் அடுத்தக் கட்டமான நேசத்திற்குத் தங்களின் பேச்சால், கிண்டலால், வார்த்தைகளால் கொண்டு சென்றனர்.
அவனும் சில வருடங்களிலேயே அதை நேசம் என்று நம்பத் தொடங்கினான். நேசிக்கவும் தொடங்கினான்.
ஆனால், நேசத்தை அவளுக்குக் கொடுத்தானா?
“தெரியவில்லையே” என்று பதில் தெரியாமல் தவித்தது அவன் மனம்.
பட்சிகள் பேசும்…