இருளும், குளிரும் போட்டி போட்டுக் கொண்டு அவர்களை இறுக்க, மொத்த குடும்பமும் ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கையில் சுருண்டிருந்தது.
வயநாட்டின் அந்தச் சிறிய வீட்டை நிறைத்துக் கொண்டிருந்தது அந்தப் பெரிய குடும்பம். பெரியவர்கள் மூவரும் ஹாலில் படுத்து விட, படுக்கையை ஆக்கிரமித்து இருந்தனர் குழந்தைகள். அவர்களோடு ராகவன் படுத்திருக்க, ஆளுக்கொரு பக்கமாக அவனைக் கட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தனர் ராகவியின் குழந்தைகள் தாராவும், நந்தாவும்.
ராகவன் உறங்குவதாகப் பாவனைச் செய்து கண்ணை மூடிக் படுத்திருந்தாலும், விழித்தே இருந்தான்.
ராகவி பெட்டி அடுக்கிக் கொண்டிருந்தாள். வீடு முழுக்கச் சிதறியிருந்த ராகவனின் பொருட்களைத் தேடி, எடுத்துக் கொண்டிருந்தாள். அமர்ந்த வாக்கில் கை நீட்டி, ராகவி கொடுப்பதை வாங்கிப் பெட்டியில் வைத்துக் கொண்டிருந்தான் உதய்.
உதயின் மடியில் நல்ல உறக்கத்தில் இருந்தான் அவர்களின் மகன் மித்ரன்.
“நீங்களும் இதை எதிர்பார்க்கலை தானே உதய்?” மெல்லக் கேட்டாள் ராகவி.
அவள் கேள்வி அவனுக்குப் புரிந்தது. ஆனாலும், புரியாதது போலவே அமர்ந்திருந்தான் உதய்.
விழிகளைச் சுழற்றி ராகவனைப் பார்த்தான். அவன் தூங்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்ததால், வாயை இன்னும் இறுக மூடிக் கொண்டான் உதய்.
“உதய்..” ராகவி மீண்டும் அழைக்க,
“என்ன பட்டே?”
“மதுமிதா விஷ் பண்ணுவான்னு நான் எதிர்ப்பார்க்கலை உதய். அவ்ளோ ஷாக்கிங்கா இருக்கு.” ராகவி ஆச்சரியத்துடன் சொல்ல, உதய் எந்தவொரு உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை.
“அவ நம்மை விட்டுப் போய் ரெண்டு வருஷம் ஆகப் போகுது இல்ல? ஆளே முழுசா மாறிட்டா” பெருமூச்சுடன் சொன்னாள் ராகவி.
“மம். நீ, ராகவன் பக்கத்தில நின்னாலே பேய் ஆட்டம் போடுவா. ஆனா, இன்னைக்கு..” உதடு சுளித்து, தோளை குலுக்கி, சிரித்தான் உதய்.
ராகவியின் முகம் வலியில் சுருங்கி, பின் நேராகியது.
“அதுதான் உதய். நம்ம யாரும் அவன் பக்கத்தில் நின்னா கூட அவளுக்குப் பிடிக்காது. ஆனா, இன்னைக்கு ராகவன், ஆராதனா ஃபோட்டோக்கு முதல் ஆளா விஷ் பண்றா. என்னால நம்பவே முடியல. நம்மளை விட்டு தள்ளி இருந்த இந்த ரெண்டு வருஷத்துல இவ்வளவு மாற்றமா. ம்ம்..” என்று ராகவி குழப்பத்துடன் சொல்ல, மீசையுடன் மேலுதடு கடித்து, குறும்பாகச் சிரித்தான் உதய்.
“என்ன?” என்றாள் கிசுகிசுப்பாக ராகவி. அவளைப் பக்கத்தில் இழுத்து, அவள் குரலிலேயே பதில் கொடுத்தான் உதய்.
“நடிப்ப நிறுத்து பட்டே.” உதய் சொல்ல, கண்களைச் சுருக்கி பொய்யாக அவனை முறைத்தாள் ராகவி.
“முதல் கமென்ட் அவதான் போட்டிருக்கா. கவனிச்சியா? அவளால எப்படி முடிஞ்சது? இத்தனைக்கும் இன்னைக்குத் தான் நாம ராகவனோட ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஆக்டிவேட் செய்தோம். எப்படி முடியும்? எனக்குத் தெரியல பட்டே. ஆனா, லெட்ஸ் வெயிட் அண்ட் வாட்ச்” என்றான் உதய். ராகவி யோசனையுடன் தலையை மெல்ல அசைத்தாள்.
அவர்கள் தன்னைப் பற்றிதான் பேசிக் கொள்கிறார்கள் என்று ராகவனும் உணர்ந்தே இருந்தான்.
அவனின் மூடிய விழிகளுக்குள் பல நூறு விஷயங்கள் முன்னும் பின்னுமாக ஓடிக் கொண்டேயிருந்தன.
அன்று மாலை நடந்த அவனின் திருமண நிச்சயமும், ஆராதனாவும் தான் முதலில் வந்தனர்.
அவனது சோர்ந்த முகத்தைப் பார்த்தே அவனது மனநிலை புரிந்தவளாகச் சிறு தயக்கப் புன்னகையுடன் அவனுக்கு விடை கொடுத்தாள் ஆராதனா.
அவள் கேள்விகளால் அவனின் மென்னியை நெரிக்காதது அந்தக் கணம் மிகுந்த ஆறுதலாக அவனுக்கிருந்தது.
மாலையில் இருந்து எதைக் குறித்து இனி யோசிக்கவே கூடாது என்று நினைத்தானோ, அதுதான் அடுத்ததாக வந்து நின்றது.
அவள் முகமும், வாழ்த்து செய்தியும், அதற்குப் பின்னாக அவன் பார்த்துத் தெரிந்து கொண்ட விஷயமும் அவன் உடலை இறுகச் செய்தது.
அவனை அணைத்துக் கிடந்த குழந்தைகளின் ஸ்பரிசம் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தியது.
“ஆராதனா” பெயரே அந்நியமாகப் பட்டது.
“மதுமிதா” எனும் பெயர் இன்னமும் மனைவியின் இடத்தை ஆக்கிரமித்திருக்கும் போது, அதை வேறு ஒருத்திக்கு தர நிச்சயித்து விட்டு வந்த தன் முட்டாள்தனத்தை எண்ணி மானசீகமாக மண்டையில் அடித்துக் கொண்டான் ராகவன்.
ஆனால், அவன் மனம் நிதர்சனத்தை அவனுக்கு எடுத்துச் சொல்ல முயன்றது. மெல்ல மெல்ல மனது மூளைக்குச் செவிசாய்க்க தயாராகியது.
முதலில் அவள் முகம் மறக்க வேண்டும், அவள் வாசம் மறக்க வேண்டும். அவள் பெயரை உச்சரிக்காமல் இருக்க வேண்டும்
அவளின் நினைவுகள் சலிக்க வேண்டும்.
தன்னால் முடியுமா? கேள்வியுடன் உறங்கிப் போனான் ராகவன்.
பல நாட்கள் கழித்து மெல்ல சோம்பல் முறித்து, லேசாகத் தன் முகத்தைப் போனால் போகிறதென்று சென்னை மக்களுக்குக் காட்டினான் சூரியன்.
மூடியிருந்த ஜன்னலின் வழியே ஊடுருவிய சூரியனின் கதிர்கள் சோம்பலாக அவளின் மேனியை சூடாக்க, போர்வையை முழுவதுமாகத் தன் மேலிருந்து நீக்கி கண்களைத் திறந்தாள் மதுமிதா.
தூக்கம் சுமந்த விழிகளுக்குள் பிரகாசமாய் வந்து விழுந்தான் அவன்.
அவள் கணவன். இல்லை, முன்னாள் கணவன், ராகவன்.
அப்படித்தானே, சொல்ல வேண்டும்? என்று எண்ணியபடி அவன் விழிகளைச் சந்திந்தாள் மதுமிதா.
படுக்கைக்கு நேர் எதிரே இருந்த சுவரை நிறைத்திருந்தது அவர்களது திருமணப் புகைப்படம்.
திருமணமான புதிதில் சட்டம் செய்து மாட்டியது. திருமணமே முறிந்தப் பின்னும் அங்கேயே இருப்பதை அவள் பெரும் அதிர்ச்சியுடன் தான் பார்த்தாள்.
அந்த அறையை அவள் எப்படி விட்டு விட்டு சென்றாளோ, அப்படியே தான் இருக்கிறது. அங்கே எந்தவொரு மாற்றமும் இல்லை.
அவர்கள் பிரிந்து முழுதாக ரஇண்டு வருடங்கள் ஆகி விட்டது.
இந்த வீட்டு பக்கமே இனி தலை வைத்துக் கூடப் படுக்க மாட்டேன் எனும் வீராப்புடன் போனவள், இப்போது அதே வீட்டில் ஒயிலாகப் படுத்து இருக்கிறாள்.
ராகவனின் வீடு. ஒரு நேரம் அவளின் வீடாக இருந்தது.
அவன் அறை. முன்பு அவர்களின் அறை. ஆனால், இன்று?
எப்போதும் போல, இமைகளைச் சிமிட்டாமல் புகைப்படத்தில் இருந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறான் ராகவன்.
முன்பும் அவனில்லாத அறையில் பல நாட்கள் அவனது இந்தப் பார்வையுடன் தான் பொழுதை நெட்டித் தள்ளி இருக்கிறாள். பேசி இருக்கிறாள். கொஞ்சி இருக்கிறாள். கெஞ்சியும் இருக்கிறாள்.
மெல்லிய பெருமூச்சுடன் பார்வையைக் கண்களில் இருந்து கீழிறக்கினாள்.
அடர்ந்த மீசையும், அதற்குக் கீழ் முற்றிலுமாக மறைந்திருந்த உதடுகளையும் இமைக்காமல் பார்த்தாள்.
அனிச்சையாய் குறுகுறுத்த இதழ்களை, கன்னத்தைத் தேய்த்து விட்டாள். முகம் எங்கும் ஈரம் பரவும் உணர்வில் அழுந்த முகத்தைத் துடைத்துக் கொண்டாள் அவள்.
நேரம் மதியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க, இன்று ராகவன் வீட்டினர் திரும்பி வந்து விடுவார்கள் என்பதை அவளுக்கு எடுத்துச் சொல்லியது மனது.
அவனை நேருக்கு நேராகச் சந்திக்கும் மனத் தைரியம் துளியும் இல்லாததால், மெல்ல படுக்கையை விட்டு எழுந்தாள்.
அந்த அறையில் எந்தப் பக்கம் அவள் நகர்ந்தாலும் அவளைப் பின் தொடர்ந்தது ராகவனின் விழிகள்.
அதைத் தவிர்க்க முடியாது, அந்தப் புகைப்படத்தின் முன் போய் நின்றாள் மதுமிதா.
திருமணப் பட்டில் இருவரும் இருக்க, அணிந்திருந்த உடை, நகை, அலங்காரம் என அனைத்தையும் தாண்டி அவர்களின் முகத்தில் இருந்த அந்த மகிழ்வும், சிரிப்பும் கோடி ரூபாய் பெரும் என்று இப்போதும் அவளுக்குத் தோன்றியது.
ஒட்டு மொத்த பற்களையும் காட்டிப் புன்னகைத்தப்படி, ராகவனைக் கூச்சமே இல்லாமல் கட்டிக் கொண்டு நின்றிருந்த அந்த மதுமிதா எங்கே போனாள்? அவளை எங்குத் தொலைத்தேன் நான்?
சிந்தனை அந்தப் பாதையில் கால் வைக்கையிலேயே கண்கள் குளம் கட்டியது.
அவளது திருமணத்திற்கு முன்பு அவளின் பாட்டி சொன்ன வார்த்தைகள் அவளின் அனுமதி இல்லாமலேயே மனதில் வலம் வந்தது.
“உனக்கு அவனைச் சமாளிக்கத் திறமை பத்தாது. அவனுக்குத் தேவையான அன்பை உன்னால குடுக்கவே முடியாது. ரொம்பப் பொறுப்பான பையன் அவன், சமூகத்தில் நல்ல அந்தஸ்த்துள்ள குடும்பம் அவங்க. அங்க நீ பொருந்தவே மாட்ட.” மேலும் எதை எதையோ சொன்னவரை, பல்லைக் கடித்தபடி முறைத்தாள் மதுமிதா. அப்படியே அவரை மென்று துப்பிவிடத் தோன்றியது அன்று.
ஒரு வகையில் அவர் சொன்னது தான் நிஜமாகியது.
“நான்தான் அன்னைக்கே சொன்னேன் இல்ல” என்று சொல்வதற்கு, பின்னால் அவர்தான் இல்லாமல் போனார்.
அலைபேசி அழைப்பு அவளைக் கலைக்க, சிறு முகச் சுளிப்புடன் அதை எடுத்து பேசி விட்டு வைத்தாள். ஆட்டோ ஒன்றை புக் செய்தாள்.
அப்படியே ராகவிக்கு, “நான் வீட்டுக்கு கிளம்பறேன். உதவிக்கு நன்றி” என்று செய்தி அனுப்பி விட்டு, முகம் கழுவி உடை மாற்றத் தொடங்கினாள்.